இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில் உருவான முழுநீளத் திரைப்படமான ‘LOVE3’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று மட்டக்களப்பு பெரியகல்லாறில் நடைபெற்றது.
இந்திய மற்றும் இலங்கை நண்பர்கள் நால்வரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்திய சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இத்திரைப்படத்தில் ‘தீம்‘ இசை உட்பட மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றை 36 பாடகர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 30 பேர் இலங்கையைச் சேர்ந்த அறிமுகக் கலைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனைய பாடகர்கள் சர்வதேச நாடுகளில் வாழும் கலைஞர்களாவர்.
மேலும், பிரபல பாடகர் திலீப் வர்மனும் இத்திரைப்படத்தில் பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, ஒரு பாடலை இலங்கைக் கலைஞர்கள் 17 பேர் இணைந்து பாடியிருப்பதுடன், அவர்களில் நான்கு வயதுச் சிறுவனும் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
இயக்குநர் சுஜீதன், திருகோணமலை தம்பலகாமத்தைச் சேர்ந்தவராவார்.






